Summary
Read the full fact sheet- துயரம் அல்லது பயமூட்டும் அனுபவங்களில் இருந்து உங்கள் குழந்தை மீண்டு வருவதற்கு நீங்கள் உதவலாம். இந்த அனுபவங்களில் பின்வருபவை அடங்கும்: வாகன விபத்துகள், காட்டுத்தீ மற்றும் வெள்ளம், குடும்பத்தில் திடீர் உடல்நலக்குறைவு அல்லது இறப்புm, குற்றம், துஷ்பிரயோகம் அல்லது வன்முறை.
- குழந்தைகள் பின்வருபவற்றைத் தேடுவார்கள்: நீங்களாகவே நெருக்கடியை எவ்வாறு சமாளிக்கிறீர்கள், அவர்களது உணர்வுகள் மற்றும் நடத்தைகளுக்கு நீங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறீர்கள்.
- உங்கள் குழந்தையுடன் அவர்களது அனுபவங்கள் பற்றி பேசுவதற்கு இந்தக் குறிப்புகள் உதவும். உண்மைகளை தனது வயதிற்கு ஏற்ப உங்கள் குழந்தை புரிந்துகொள்ளும் வகையில் நீங்கள் சொல்வது முக்கியமாகும்.
- நீங்கள் எப்பொழுதும் தொழில்முறை உதவியை நாடலாம். தொடங்குவதற்கு நல்ல இடம் உங்கள் குடும்பப் பொதுமருத்துவர் ஆவார்.
On this page
- அதிர்ச்சிகரமான சம்பவத்திற்கு குழந்தைகள் எவ்வாறு எதிர்வினையாற்றுவார்கள்
- ஒர் அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து எவ்வாறு பேசுவது
- ஓர் அதிர்ச்சிகரமான சம்பவத்திற்கு நீங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றலாம்
- ஓர் அதிர்ச்சிகரமான சம்பவத்திற்குப் பிறகான குடும்ப அன்றாட நடைமுறைகள்
- உங்கள் குழந்தை மீளுவதற்கு எவ்வாறு உதவுவது:
- எங்கே உதவி பெறுவது
அதிர்ச்சிகரமான சம்பவத்திற்கு குழந்தைகள் எவ்வாறு எதிர்வினையாற்றுவார்கள்
துயரம் அல்லது பயமூட்டும் அனுபவத்திற்கு ஒரு குழந்தையின் எதிர்வினை பின்வருபவற்றைச் சார்ந்து இருக்கலாம்:
- அவர்களது வயது
- அவர்களது குணநலன்
- நீங்கள் அல்லது உங்கள் குடும்பம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது
நீங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் உங்கள் குழந்தை எதிர்வினையாற்றாமல் இருக்கலாம். அவர்கள் பின்வருமாறு இருக்கலாம்:
- ஆர்வமற்று - செயல்பாடுகளில் இருக்கும் ஈடுபாட்டை அவர்கள் இழக்கலாம். நம்பிக்கைக் குறைந்தவராக, அமைதியாக, அல்லது குழந்தையாக இருந்தபோது இருந்த நடத்தைக்குத் திரும்புதல் போன்றவையும் ஏற்படலாம்.
- சிந்தனையில் ஆழ்தல் - அந்த அனுபவத்தை அவர்கள் மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டிருக்கலாம். உதாரணமாக, திரும்பத்திரும்ப விளையாடுதல் அல்லது வரைதல் மூலம். எதிர்கால நினைவுகள் குறித்து உங்கள் குழந்தை பயப்படலாம் அல்லது கொடுங்கனவுகள் காணலாம்.
- படபடப்பு - கவனம் செலுத்துதல் அல்லது ஒருநிலைப்படுத்துதலில் அவர்களுக்குச் சிக்கல் ஏற்படலாம். அவர்கள் எப்பொழுதும் உங்களுடனேயே இருக்க விரும்பலாம், தூக்கத்தில் சிக்கல் இருக்கலாம் அல்லது எளிதாக விரக்தியடையலாம்.
- சுகமின்மை - தலைவலிகள் மற்றும் வயிற்றுவலிகள் அவர்களுக்கு இருக்கலாம்.
உங்கள் குழந்தைக்கு தாமதமாக எதிர்வினை ஏற்படலாம். சில குழந்தைகள் நன்றாக இருக்குமாறு தோன்றலாம், ஆனால் நாட்கள், வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்தும்கூட எதிர்வினையாற்றலாம்.
ஒர் அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து எவ்வாறு பேசுவது
நீங்கள் நேர்மையாக இருந்தால் அது உங்கள் குழந்தைக்கு உதவியாக இருக்கும். நீங்கள் பின்வருபவற்றைச் செய்யலாம்:
- உங்கள் குழந்தை பாதுகாப்பாக உள்ளார் என்றும் அந்த நிகழ்வு முடிந்துவிட்டது என்றும் அவருக்கு நீங்கள் நம்பிக்கையூட்டலாம். நீங்கள் பலமுறை நம்பிக்கையூட்ட வேண்டியிருக்கலாம்.
- உங்கள் குழந்தை சொல்வதைக் கேளுங்கள். அவர்களது கவலைகள் மற்றும் உணர்வுகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள்.
- அவர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பது குறித்து நீங்கள் கேட்கவிரும்புவதை உங்கள் குழந்தைக்குத் தெரியப்படுத்துங்கள்.
- என்ன நடந்தது என்பதை உங்கள் குழந்தையின் வயதிற்கு ஏற்ப கூறுங்கள். அவர்களுக்குப் புரியும் மொழியைப் பயன்படுத்துங்கள். உங்கள் குழந்தைக்கு அடிப்படை உண்மை தெரியாவிட்டால், என்ன நடந்தது என்று அவர்களே யோசிக்கத் தொடங்குவார்கள். அவர்களது கற்பனை அல்லது குறைந்த தகவலைப் பயன்படுத்தி கதையை நிறைவு செய்வார்கள். இது உங்கள் குழந்தைக்கு அதிகப் படபடப்பு அல்லது குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.
- நடந்தது அவர்களது தவறு இல்லை என்பதை உங்கள் குழந்தை உணர்வதை உறுதிசெய்யுங்கள். அவர்கள் குறும்பானவர்களாக அல்லது பிறரைப் பற்றி தவறாக நினைத்திருந்தால் அவ்வாறு எண்ணக்கூடும்.
- ஒரு குடும்பமாக அந்த நிகழ்வைப் பற்றி பேசுங்கள். குழந்தைகள் உட்பட அனைவரும் தங்கள் கருத்தைத் தெரிவிக்க அனுமதியுங்கள். அனைவரும் ஆதரிக்கப்பட்டு, கேட்கப்பட்டு மற்றும் புரியப்பட்டதாக உணர இது உதவும்.
- துயரத்துக்கு மக்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுவார்கள் என்று உங்கள் குழந்தையிடம் பேசுங்கள். இது போன்ற சந்தர்ப்பங்களின் அவர்களது உணர்வுகள் இயல்பானவை என்று அவர்களிடம் கூறுங்கள். காலம் செல்லச்செல்ல நன்றாக உணருவார்கள் என்று அவர்களுக்கு நம்பிக்கையளியுங்கள்.
ஓர் அதிர்ச்சிகரமான சம்பவத்திற்கு நீங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றலாம்
உங்கள் குழந்தையின் உணர்வுகள் மற்றும் நடத்தைக்கு நீங்கள் எதிர்வினையாற்றும் விதம் அவர்கள் மீண்டுவருவதில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் முக்கியமானது:
- அவர்களது நடத்தையில் ஏற்படும் மாற்றம் குறித்துப் புரிந்துகொள்ளுதல். துயரமான அல்லது பயமூட்டும் நிகழ்வுகளுக்கு குழந்தைகள் வெவ்வேறு வழிகளில் எதிர்வினையாற்றுவார்கள். அடம்பிடித்தல் அல்லது படுக்கையில் சிறுநீர் கழித்தல் போன்று அவர்களது நடத்தையில் மாற்றம் இருப்பது இயல்பாகும்.
- உங்கள் குழந்தைக்குக் கூடுதல் கவனம் தாருங்கள். இது படுக்கை நேரத்திலும் பிரிந்திருக்கும் பிற நேரங்களிலும் முக்கியமானதாகும்.
- நீங்களும் உதவி பெறுங்கள். ஒரு சிக்களைப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்ற குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்களைப் பார்ப்பார்கள். அவர்களது பயங்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆறுதல் அளிக்க அவர்களைச் சுற்றி பெரியவர்கள் வேண்டும். நீங்கள் துயரத்தில் இருந்தால், நீங்களும் ஆதரவு பெறலாம். இல்லாவிட்டால், உங்கள் குழந்தை உணரும் பயம் மற்றும் அழுத்தம் அதிகரிக்கலாம்.
- உங்கள் உணர்வுகளைப் பற்றி பொருத்தமான வழியில் உங்கள் குழந்தையிடம் பேசுங்கள். அவர்களது உணர்வுகள் குறித்துப் பேசுவதற்கு இது உதவலாம்.
- ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள் மற்றும் வெவ்வேறு உணர்வுகளைக் கொண்டவர்கள் என்பதை நினைவில் வைக்கவும். நீங்கள் உணர்வதைப் போலவே உங்கள் குழந்தையும் உணரவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.
- உங்கள் குழந்தைக்கு தன் வாழ்வின்மீது கட்டுப்பாடு உண்டு என்ற உணர்வைத் தாருங்கள். சிறு முடிவுகளை எடுப்பதுகூட அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக உணர வைக்கும். குறிப்பாக ஒரு சிக்கலின் குழப்பத்திற்குப் பிறகு இது மிகவும் அவசியமானதாகும். உதவியற்று உணரும் குழந்தைகள் அதிக அழுத்தத்தை அனுபவிக்கக்கூடும்.
- உங்கள் குழந்தையின் மீது அதீத பாதுகாப்பு உணர்வுடன் இருக்காதீர்கள். ஒரு பிரச்சனைக்குப் பிறகு உங்கள் குடும்பத்தை நெருக்கமாக வைத்திருக்க விரும்புவது இயல்பாகும். ஆனால் தனது உலகம் பாதுகாப்பானது என்று அவர்கள் உணர உதவுவது முக்கியமாகும்.
ஓர் அதிர்ச்சிகரமான சம்பவத்திற்குப் பிறகான குடும்ப அன்றாட நடைமுறைகள்
இதில் முக்கியமானது:
- முடிந்த அளவில் உங்கள் அன்றாட வழக்கத்தைப் பின்பற்றுங்கள். இது குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டும்.
- உங்கள் குழந்தை தனது அன்றாட வழக்கத்தைப் பின்பற்ற முடியவில்லை என்றால் அவர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள். பள்ளிக்குச் செல்வது அல்லது வீட்டுவேலைகளைச் செய்வது போன்றவை இதில் உள்ளடங்கும்.
- புதிய வழக்கங்கள், பொறுப்புகள் அல்லது அவர்கள் நடத்தையின் மீது எதிர்பார்ப்புகள் போன்ற மாற்றங்களை அறிமுகப்படுத்துவதைத் தவிருங்கள்.
- வீட்டில் வயதுவந்தவராக உங்கள் பொறுப்பைப் பேணுங்கள். நீங்கள் தத்தளித்துக்கொண்டிருந்தால், உதவிக்கு உங்கள் குழந்தையைச் சார்ந்திருக்காமல் இருப்பது முக்கியமாகும்.
உங்கள் குழந்தை மீளுவதற்கு எவ்வாறு உதவுவது:
இதில் முக்கியமானது:
- உங்கள் குழந்தைக்கு விளையாட நிறைய நேரம் அனுமதியுங்கள். விளையாட்டு, அவர்களுக்குப் பிடித்த விளையாட்டுகள் மற்றும் அறிந்த நண்பர்களுடன் செயல்பாடுகள் ஆகியவையாக இது இருக்கலாம்.
- வேடிக்கைக்கு நேரம் ஒதுக்குங்கள். சிரிப்பு, நல்ல நேரங்கள் மற்றும் மகிழ்ச்சியைப் பகிர்வது ஆகியவை அனைத்து குடும்ப உறுப்பினர்களும் நன்றாக உணர உதவும்.
- உங்கள் குழந்தையின் பசி மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவும். அவர்களுக்கு உணவு நேரத்தில் உண்ண விருப்பமில்லை என்றால், அதற்குப் பதில் நாள் முழுவதும் தொடர்ந்து சிற்றுண்டிகள் வழங்குங்கள்.
- உங்கள் குழந்தைக்குப் போதுமான ஓய்வும் தூக்கமும் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
- உடற்பயிற்சியில் அவர்களுக்கு உதவுங்கள். இது உங்கள் குழந்தையின் மன அழுத்தத்திற்கு உதவி அவர்களது தூக்கத்தை மேம்படுத்தும்.
- சர்க்கரை, நிறமூட்டிய உணவுகள் மற்றும் சாக்லேட்டுகளைக் கட்டுப்படுத்துங்கள்.
- உங்கள் குழந்தை உடல்ரீதியாக ஓய்வாய் இருக்க உதவுங்கள். வெந்நீர் குளியல், மசாஜ்கள், கதைநேரங்கள் மற்றும் நிறைய கட்டியணைத்தல்கள் மூலமாக இது இருக்கலாம்.
- உங்கள் குழந்தை சோகமாக அல்லது படபடப்பாக உணர்ந்தால் செயல்பாட்டை மாற்றுங்கள். உதாரணமாக, உங்கள் குழந்தையை கவலைப்பட அல்லது பயப்பட வைக்கிற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி.
உங்கள் மனநலம் அல்லது உங்கள் அன்புக்குரியவர்களின் மனநலம் குறித்து எப்போதாவது நீங்கள் கவலையடைந்தால், 13 11 14 என்ற உயிர்காப்பு எண்ணை (Lifeline) அழைக்கவும்.
எங்கே உதவி பெறுவது
- உங்கள் GP (பொது மருத்துவர்)
- உங்கள் மகப்பேறு மற்றும் குழந்தை உடல்நல செவிலியர்
- உங்கள் உள்ளூர் சமூகநல மையம்
- குழந்தைநல மருத்துவர் அல்லது குழந்தை மற்றும் வளரிளம் பருவ உளவியலாளர் - உங்கள் மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரைக்கலாம்
- அதிர்ச்சிக்குப் பிறகான மனநலனுக்கான ஃபீனிக்ஸ் ஆஸ்திரேலியா மையம் தொலைபேசி (03) 9035 5599
- துக்கம் மற்றும் இழப்புத் துயரத்திற்கான மையம் தொலைபேசி 1800 642 066
பின்வருபவற்றில் இருந்தும் கூட நீங்கள் ஆலோசனை பெறலாம்:
- உயிர்காப்பு தொலைபேசி 13 11 14
- துயர உதவிஎண் தொலைபேசி 1300 845 745
- பியாண்ட்ப்ளூ தொலைபேசி 1300 22 4636
- கிட்ஸ் ஹெல்ப்லைன் தொலைபேசி 1800 55 1800
- நர்ஸ்-ஆன்-கால் தொலைபேசி 1300 60 60 24 – நிபுணத்துவம் வாய்ந்த உடல்நலத் தகவல் மற்றும் ஆலோசனை (24 மணிநேரமும், 7 நாட்களும்)
- ஆஸ்திரேலிய குழந்தைவளர்ப்பு வலைத்தளம் - raisingchildren.net.au